சென்னை: நீட் தேர்வு விலக்கு என்று கூறி மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்ததாக தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியிருந்த நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், நீட்விலக்கு என்பது சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக் போன்றதல்ல என்று கூறியுள்ளார்.
முன்னதாக இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய், 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள்.
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
— TVK Vijay (@tvkvijayhq) January 11, 2025
இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை…
ஆனால், தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசிற்குத் தான் உள்ளது, மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம் இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை," என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், "நீட் தேர்வு விலக்கு என்பது ஒன்றிய அரசு எதிராக நடக்கும் போராட்டமாகும். ஒன்றிய அரசை பொறுத்தவரை கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர். அதனால்தான் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மறுக்கின்றனர். நீட் விலக்கு என்பது யாரோ எழுதிக் கொடுத்து அதன் பின்னர் சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக் போன்ற ஒன்று அல்ல. இது ஒரு சட்ட நடைமுறை, மாநில, மத்திய அரசுகளுக்கு இடையேயான நடைமுறை,"என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அன்று கேப்டனின் தளபதி...இன்று ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர்... யார் இந்த வி.சி.சந்திரகுமார்?
மேலும் பேசிய அமைச்சர் சிவசங்கர்," அண்ணா பல்கலைக்கழக வழக்கை பொறுத்தவரை குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே கைது செய்திருக்கிறார்கள். உயர் நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே ஆதாரம் இருந்தால் அந்த குழுவிடம் கொடுக்கலாம். அதை விடுத்து தேவையில்லாமல் நாடகம் போடுகிறார்கள். சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த வட்டச் செயலாளர் பாலியல் வழக்கில் சிக்கி இருக்கிறார் அதனை மூடி மறைக்கத்தான் இப்படி போராட்டம் நடத்துகிறார்கள்.
அதிமுகவில் எத்தனை 'சார்' இருக்கிறார்கள் என்பதை நான் கொடுத்த அறிக்கையில் வெளியாகியிருக்கிறது. ஆதாரப்பூர்வமாக சொல்லி இருக்கிறேன் இன்னும் சில சார்-கள் விடுபட்டு இருக்கிறார்கள். அதிமுகவில் தலைவர்கள் போராட முன் வராமல் அந்த கட்சியில் உள்ள அப்பாவி மகளிரை போராட்டத்திற்கு முன் நிறுத்துகிறார்கள் அவர்கள் எப்படிப்பட்ட அரசியலை நடத்துகிறார்கள் என்பது இதிலிருந்து தெரியும்,"என்று தெரிவித்தார்.