சென்னை: நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள "படை தலைவன்" (Padai Thalaivan) திரைப்படம் ஜனவரி 24-ம் தேதிக்கு முன்னதாக வெளியிடப்பட மாட்டாது என படை தலைவன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
ஸ்மார்ட் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.சரவணன் தாக்கல் செய்திருந்த மனுவில், "சண்முக பாண்டியன், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படை தலைவன் படத்தின் வெளிநாட்டு உரிமையை படத் தயாரிப்பு நிறுவனம் தனக்கு வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.
மொத்த தொகையாக 1 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் ஆன நிலையில், முன் பணமாக 45 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும், இசை வெளியீட்டின் போது பாக்கி தொகை வழங்கப்படப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்படாததால், பாக்கி தொகை வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொங்கல் (ஜன.14) அன்று படம் வெளியாகும் என்ற விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், முன்பணமாக கொடுத்த 45 லட்சம் ரூபாயை திருப்பி அளிக்காமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான குற்றம்: கடுமையான சட்டத்திருத்தம் பேரவையில் நிறைவேற்றம்!
இந்த மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலன் ஆஜராகி, ஒப்பந்தப்படி வெளிநாட்டு உரிமையை தங்களுக்கு வழங்குவதாக இருந்தால் மீதத் தொகையை செலுத்த தயாராக இருப்பதாக கூறினார். பின்னர், படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், படம் ஜனவரி 24ம் தேதி வெளியிடப்பட மாட்டாது எனவும், 45 லட்சம் ரூபாயை திரும்ப அளிப்பது குறித்து தயாரிப்பாளரிடம் கருத்து பெற்று தெரிவிப்பதாகவும் கூறினார்.
அதையடுத்து, சண்முக பாண்டியன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்திற்கு தொடர்பில்லாத தன்னை வழக்கில் இணைத்துள்ளதாகவும், கடைசி நேரத்தில் தடைக்கோரி இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்யக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதையடுத்து, ஜனவரி 24ஆம் தேதிக்கு முன்னதாக படம் வெளியிடப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.