ராஞ்சி:ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. ஜார்கண்ட் அமைச்சரவையில் காங்கிரஸ் தலைவர் ஆலம்கீர் ஆலம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சரின் உதவியாளர் மற்றும் அவரது பணியாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏறத்தாழ 32 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.
இந்த விவகாரத்தில் அவரது உதவியாளர் சஞ்சீவ் லால், மற்றும் பணியாளர் ஜஹாங்கீர் ஆலம் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தினர். மேலும், இருவரிடம் இருந்து பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு ஆஜாராகி விளக்கம் அளிக்குமாறு ஆலகீர் ஆலமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை ஏற்று ஆலம்கீர் ஆலம் கடந்த செவாய்கிழமை (மே.14) விசாரணைக்கு ஆஜரானார். அன்றைய தினம் ஏறத்தாழ 10 மணி நேரம் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து நேற்றும் (மே.15) அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.
விசாரணையை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காததை அடுத்து அவரை கைது செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜார்கண்ட் அமைச்சர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.