ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரியில் கைது செய்தது. இதன் காரணமாக, தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஹேமந்த் சோரன், கட்சியின் மூத்த தலைவரான சம்பாய் சோரனை முதல்வர் நாற்காலியில் அமர வைத்துவிட்டு சிறைக்குச் சென்றார்.
இந்த நிலையில், இவ்வழக்கில் அவருக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜூன் மாத இறுதியில் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளிவந்ததும், சம்பாய் சோரனை முதல்வர் பதவியில் இருந்து விலக செய்துவிட்டு, ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார். இதனால் சம்பாய் சோரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
தமது இந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் விதத்தில், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அண்மையில் டெல்லியில் முகாமிட்டிருந்த சம்பாய் சோரன், அங்கு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தாக தகவல் வெளியானது. இத்தகவலை உறுதிப்படுத்தும் வகையில், அமித் ஷா - சம்பாய் சோரன் சந்தித்து பேசும் புகைப்படத்தை, அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா தமது எக்ஸ் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.