சென்னை:குறைந்த கட்டணத்தில் விரைவாகவும், வசதியாகவும், எளிதாகவும் பயணிக்கக்கூடிய வகையில் ரயில்கள் இருப்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை விரும்புகின்றனர். நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ரயில் பயணங்களை நம்பியே உள்ளனர். மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்தில் ரயில் போக்குவரத்து முக்கியமான ஒன்றாக உள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். அதனால் ஒவ்வொரு பயணியின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய ரயில்வே புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் ரயில்களில் பயண டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 120 நாட்களாக இருந்த டிக்கெட் முன்பதிவு காலம் (ARP - Advance Reservation Period) தற்போது 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
முன்பு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு காலம் 60 நாட்களாக இருந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு டிக்கெட்டு முன்பதிவு காலம் 120 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே வாரியத்தின் அறிவிப்பு படி நீங்கள் பயணம் மேற்கொள்ளும் தேதியில் இருந்து 60 நாட்களுக்கு முன்பில் இருந்து மட்டுமே இனி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
ரயில்வே வாரிய அறிவிப்பு (credits - All India Radio News X Page) இதையும் படிங்க:"குடியுரிமை திருத்த சட்டம் பிரிவு 6ஏ செல்லும்" -உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் 4 நீதிபதிகள் ஆதரவு தீர்ப்பு
இது வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. அதுவரைக்கும் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்கள் என்பதே நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எந்தந்த ரயில்களுக்கு பொருந்தாது?: இந்த டிக்கெட் முன்பதிவு காலம் குறைப்பு பகல் நேரங்களில் இயங்கும் கோம்தி எக்ஸ்பிரஸ், தாஜ் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களுக்கு பொருந்தாது என்றும் ரயில்வே வாரியம் கூறியுள்ளது. மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு காலம் 365 நாட்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு நீங்கள் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தாலும், நவம்பர் மாதத்திற்கு பின் மேற்கொள்ளவிருக்கும் பயணத்திற்கு நீங்கள் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தாலும் பிரச்சினை இல்லை. நீங்கள் ஏற்கனவே முன்பதிவு செய்திருக்கும் டிக்கெட்டுகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அந்த டிக்கெட்டுகள் செல்லும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
ரயில் டிக்கெட்டுகளை 100 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து, பின் சில காரணங்களுக்காக அதனை ரத்து செய்வதை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamilnadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்