புதுடெல்லி: காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சதி திட்டம் பிரதமர் நரேந்திரமோடிக்கு முன்கூட்டியே தெரியும் என்ற கனடா ஊடகத்தின் செய்திக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிறந்த 45 வயதான நிஜ்ஜார், கனடாவிற்கு குடிபெயர்ந்தவர் ஆவார். அங்கு அவர் பிளம்பிங் தொழில் செய்து வந்ததாகத் தெரிகிறது. மேலும் காலிஸ்தான் இயக்கத்தை முன்னெடுத்தும் வந்தார். இதனிடையே இவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இவரது கொலை குறித்து இந்தியா-கனடா இடையே பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன. இதனால் இருநாடுகளுக்கு இடையேயான தூதரக மட்டத்திலான உறவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கனடாவில் இருந்து வெளியாகும் குளோப் அண்ட் மெயில் எனும் பத்திரிகையில் பெயர் சொல்ல விரும்பாத கனடா அதிகாரி கூறியதாக செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில் காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த நிஜ்ஜார் கொலை சதித்திட்டம் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு முன்கூட்டியே தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கும் இந்த கொலை சதித்திட்டம் முன்கூட்டியே தெரியும் என்று அந்த கனடா பத்திரிகை தெரிவித்துள்ளது.