கசான்(ரஷ்யா): அமைதியான முறையில் ரஷ்யா-உக்ரைன் மோதல் தீர்க்கப்படுவதற்காக இந்தியா அனைத்து சாத்தியமான ஒத்துழைப்பையும் நல்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளின் 16ஆவது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் இன்று தொடங்கியுள்ளது. வரும் 24ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்ரிக்கா. எகிப்து, எத்தியோப்பியா,ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரஷ்யாவின் கசான் நகருக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். பிரதமருக்கு ரஷ்ய பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியை ரஷ்யாவில் உள்ள இந்திய வம்சா வழியினர் உற்சாகமாக வரவேற்றனர்.இதன் பின்னர் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் இது குறித்து அந்நாட்டின் தொலைகாட்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,"இந்த பிராந்தியத்தில் வலு மற்றும் அமைதிக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும். கடந்த மூன்று மாதங்களில் நான் ரஷ்யாவுக்கு வருவது இது இரண்டாவது முறையாகும். இருநாடுகளுக்கு இடையே நெருங்கிய ஒத்துழைப்பு ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதையே இது வெளிப்படுத்துகிறது.ரஷ்யா-உக்ரைன் இடையேயான மோதல் விவகாரம் குறித்து நாங்கள் இருவரும் தொடர்ந்து பேசி வருகின்றோம்.நான் ஏற்கனவே கூறியபடி, பிரச்னைகள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
இதையும் படிங்க:"பல்வேறு விஷயங்களை விவாதிப்பதற்கான முக்கியமான தளம்" -பிரிக்ஸ் மாநாடுக்கு செல்லும் முன்பு பிரதமர் வெளியிட்ட பதிவு
அதற்கான தருணம் வாய்க்கும்போது இந்தியா அனைத்து விதமான சாத்தியமான ஒத்துழைப்பும் வழங்க தயாராக இருக்கிறது. இருநாடுகளுக்கு இடையே நடைபெற்ற உச்சி மாநாட்டின் மூலம் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்தக் கூடிய பலன் கிடைத்தது. பிரிக்ஸ் மாநாட்டுக்கு தலைமையேற்றுள்ள ரஷ்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கின்றேன். இப்போது பிரிக்ஸ் அமைப்பில் பல நாடுகள் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன,"என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்