ஹைதராபாத்: மூத்த வழக்கறிஞரும், சட்ட வல்லுநருமான ஃபாலி எஸ் நாரிமன்(வயது 95) டெல்லியில் இன்று (பிப்.21) காலமானார். உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், தனது இறப்பு வரை மற்ற வழக்கறிஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினார் என சட்ட வல்லுநர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த ஃபாலி நாரிமன்?:ஃபாலி நாரிமன் 1929 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி மியான்மரில் பிறந்தார். பள்ளிப்படிப்பை சிம்லாவிலும், பொருளாதார பிரிவில் பட்டப்படிப்பையும், சட்டப்படிப்பையும் மும்பையில் அரசு சட்டக் கல்லூரியிலும் முடித்தார். நாரிமன் மும்பை உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். வழக்கறிஞராக 22 ஆண்டுகள் பயிற்சியை நிறைவு செய்த பிறகு, அவர் 1971 இல் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக (ASG) மே 1972- ஜூன் 1975 வரை இருந்தார். 1991 முதல் 2010 வரை இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும், 1999 - 2005 வரை மாநிலங்களவை நியமன உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா சொத்து வழக்கு:1991-96 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தனது பதவி காலத்தில் மாதம் 1 ரூபாய் ஊதியமாக பெற்றார். ஆனால், 5 ஆண்டு கால ஆட்சி முடிவில் வருமானத்துக்கு அதிகமாக 66.65 கோடி ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
1996 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பின் 2014ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து 22 நாட்கள் சிறையில் இருந்த ஜெயலலிதா, ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.