சிம்லா:இமாச்சலப் பிரதேசத்தில் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரஸ் 40 மற்றும் பாஜக 25 சட்டமன்ற உறுப்பினர்களுடன் உள்ளது. இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசதம் மாநிலத்தில் உள்ள ஒரேயொரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளருக்கு 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறியும், 3 சுயேட்சைகளும் வாக்களித்ததால், பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவரும் தலா 34 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனையடுத்து, பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றார்.
மேலும், கட்சி மாறி வாக்களித்த 6 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை ஹரியானா காவல் துறையினரும், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரும் கடத்திச் சென்றதாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் குற்றம் சாட்டினார். இதனிடையே, நேற்றைய தினம் நடைபெற்ற இமாச்சல் சட்டப்பேரவையில், நிதி மசோதா நிறைவேற்ற தீர்மானத்தை, அம்மாநில அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சவுகான் தாக்கல் செய்தார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையை அரசு நிரூபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனையடுத்து, 15 பாஜக உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் குல்தீப் சிங் பதானியா அறிவித்தார். மேலும், மதியம் 12 மணி வரை அவையும் ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூடிய அவையில், பாஜக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. எனவே, நிதி மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே, கட்சி மாறி வாக்களித்த 6 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு பேரவைத் தலைவர் நோட்டீஸ் பிறப்பித்தார். இதற்கு விளக்கம் அளிக்க ஒரு வாரகாலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று 6 உறுப்பினர்களும் வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், ராஜிந்தர் ராணா, சுதிர் ஷர்மா, இந்தர் தத் லகன்பல், தேவேந்திர் குமார் புட்டோ, ரவி தாகுர் மற்றும் சேடன்யா ஷர்மா ஆகியோரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் 6 பேரும், கட்சி மாறி வாக்களித்தது மட்டுமின்றி, நேற்று நடைபெற்ற நிதி மசோதா மீதான தீர்மான நிறைவேற்றத்தின் போதும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இமாச்சல பிரதேச அரசியலில் அடுத்தடுத்த திருப்பம்! ராஜினாமாவை வாபஸ் பெற்ற விக்ரமாதித்ய சிங்! என்ன நடக்கிறது?