புதுடெல்லி:குடியிருப்புகளுக்கான இலவச சூரிய மின் உற்பத்தி திட்டம் மேலும் ஊக்குவிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் குடியிருப்புகளில் சூரிய மின் உற்பத்தி தகடுகளை நிறுவும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஒரு கோடி குடியிருப்புகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மினசாரம் பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த, குடியிருப்புகளுக்கான சூரிய மின் சக்தி உற்பத்தி திட்டம் மூலம், நாடு முழுவதும் ஒரு கோடி குடும்பங்கள் மாதந்தோறும் 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் பெற முடியும். இதன் மூலம் ஆண்டுக்கு 18 ஆயிரம் ரூபாயை அவர்கள் சேமிக்க இயலும் என்றும் தமது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், எரிசக்தி துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளையும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்போது வெளியிட்டார். அவற்றின் முக்கிய அம்சங்கள்:
பவர் கிரிட் கார்ப்பரேஷன் என்ஹெச்பிசி லிமிடெட் உள்ளிட்ட எட்டு பொதுத் துறை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான முதலீடு நடப்பு நிதியாண்டில் (2024-25) கிட்டத்தட்ட 14 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது கடந்த நிதியாண்டில் 56 ஆயிரத்து 119.55 கோடியாக இருந்த இந்த முதலீடு, தற்போது 67 ஆயிரத்து 286.01 கோடியாக அதிகரித்துள்ளது.
மத்திய மின்சார ஆணையத்தின் தரவுகளின்படி, 73 ஜிகாவாட் அளவுக்கு சூரிய மின் உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. இதேபோன்று 45 ஜிகாவாட் காற்றாலை மின்சாரத்தையும், 47 ஜிகாவாட் நீர் மின்சக்தி உற்பத்தி செய்யும் திறனையும் நம் நாடு கொண்டுள்ளது.
போக்குவரத்துக்கு இயற்கை எரிவாயு கலந்த உயிரி எரிவாயு பயன்பாடும், வீட்டு உபயோகத்துக்கு இயற்கை எரிவாயு பயன்பாடும் கட்டாயமாக்கப்படும்
பொது போக்குவரத்தில் மின்சார பேருந்துகளின் பயன்பாடு அதிகரிக்க ஊக்குவிக்கப்படும். இதற்கு வசதியாக மின்பேட்டரிகள் உற்பத்தி மற்றும் அவற்றை சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்புகள் விரிவுப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட் 2024; விசாகப்பட்டினம் - சென்னை தொழில் வழித்தடம் அமைக்க நிதி ஒதுக்கீடு!