தர்மசாலா: சீனா - திபெத் இடையே நீண்ட காலமாக சுதந்திர பிரச்சினை நிலவுகிறது. திபெத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா அதற்கு இடையூறாக உள்ள திபெத்திய ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவை நாடு கடத்தியது. இதையடுத்து இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் அவர் தங்கி உள்ளார். கடந்த 1959ஆம் ஆண்டு திபெத்தில் இருந்து தப்பி வந்த அவருக்கு இந்தியா அடைக்கலம் அளித்தது.
இந்நிலையில், திபெத் சீனா இடையே நிலவி வரும் பிரச்சினையில் தீர்வு காணும் விதமாக அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்திற்கு விரைவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அமெரிக்காவின் திபெத் சுதந்திரம் குறித்த தீர்மானத்திற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெக்சாஸின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான மைக்கேல் மெக்கால் தலைமையிலான குழு தலாய்லாமாவை காண இந்தியா விரைந்துள்ளது. இந்த குழுவில், ஜனநாயகக் கட்சியின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியும் உள்ளார்.
தரம்சாலாவில் உள்ள தலாய் லாமாவின் மடாலயத்திற்கு வந்த அவர்களை, பள்ளி குழந்தைகள், புத்த துறவிகள் மற்றும் பெண் துறவிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். திபெத் பிரச்சினைக்குத் தீர்வு காண சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் அமெரிக்கா இயற்றியுள்ள மசோதா, அதிபர் ஜோ பைடனின் கையொப்பத்திற்காகக் காத்திருக்கும் நிலையில், அது தொடர்பாக தலாய்லாமாவுடன் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.