ராஞ்சி:ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன், ஆகஸ்ட் 30 அன்று பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா நேற்று இரவு அறிவித்துள்ளார். இதனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சம்பாய் சோரன், பிஸ்வா ஆகியோரின் சந்திப்புக்குப் பிறகு அறிவித்தார்.
மேலும், இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சிறிது நேரத்திற்கு முன்னாள், நாட்டின் பழங்குடி முக்கிய தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சருமான சம்பாய் சோரன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தார். சம்பாய் சோரன், ஆகஸ்ட் 30 அன்று ராஞ்சியில் வைத்து பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக இருந்தபோது கைது செய்யப்பட்டார். இதனால், அக்கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதன்படி, கடந்த பிப்ரவரி 2 முதல் ஜூலை 3 வரை என ஆறு மாத காலம் ஆட்சியையும் கட்சியையும் சம்பாய் சோரன் வழிநடத்தினார்.