டெல்லி:நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024 மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செவ்வாய்க்கிழமை) பதில் அளித்தார்.
அப்போது பேசிய அவர், “மத்திய பட்ஜெட்டில் எந்த மாநிலங்களையும் புறக்கணிக்கவில்லை. பட்ஜெட்டில் எந்த மாநிலத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை என்றால், அந்த மாநிலத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு கிடைக்காது என்று எதிர்கட்சித் தலைவர்கள் தவறாகப் பேசுகின்றனர். கடந்த ஆட்சியில் தாக்கல் செய்த பட்ஜெட் உரையிலும் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிடவில்லை.
2004ஆம் ஆண்டு முதல் பல ஆண்டு பட்ஜெட் உரைகளைக் கேட்டு வருகிறேன். 2004 - 2005இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பட்ஜெட்டில், 17 மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. அப்போது, அந்த 17 மாநிலங்களுக்கும் நிதி செல்லவில்லையா? அதை நிறுத்தி வைத்தீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திராவுக்கு மட்டுமே நிதி வழங்கப்பட்டுள்ளது என்றும், மற்ற மாநிலங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர் இடம்பெறவில்லை என்றால் அவை புறக்கணிக்கப்பட்டதாக இல்லை. சிலர் கூறிய தவறான கருத்துகள் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தவறான கருத்துகளைப் பரப்பும் செயலில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.