ஃபிரோசாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம், ஃபிரோசாபாத் மாவட்டத்தின் நவுஷேரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்த நிலையில், பட்டாசு சேமித்து வைக்கப்பக்கப்பட்டு இருந்த வீட்டில் இன்று அதிகாலை பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் அருகில் உள்ள வீடுகளின் மேற்கூரைகளும் சேதம் அடைந்தன.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இது குறித்து ஆக்ரா வட்டார ஐஜி தீபக் குமார் கூறுகையில், “சிகோஹாபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் தாக்கத்தால் அருகில் உள்ள வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்துள்ளன. இந்த கட்டட இடிபாடுகளில் இருந்து 10 பேரை போலீசார் மீட்டு உள்ளனர். இவர்களில் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.
இதையும் படிங்க:சேலம் பருத்திக்காடு பட்டாசு குடோனில் வெடி விபத்து; ஒருவர் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம்
அதேநேரம், ஃபிரோசாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் ரமேஷ் ரஞ்சன், “மீட்புக் குழு சம்பவ இடத்தில் உள்ளது. மாவட்ட மற்றும் இதர மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், சம்பவ இடத்தில் மருத்துவர்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் ஆகியோர் தயார் நிலையில் இருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.