ஹைதராபாத்: மும்பையில் மக்களவைத் தேர்தல் நாளை (மே 20) நடைபெறுகிறது. இந்த தேர்தலில், சிவ் சேனா (UBT) இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், NCP (சரத்பவார்) இணைந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கு எதிராக போட்டியிடுகிறது.
இந்நிலையில், பாஜக தலைவர் நிலேஷ் ரானே தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "சிவ் சேனா ஊர்வலத்தில் பாகிஸ்தான் கொடி இடம்பெற்றுள்ளதாகவும், இனி PFI, SIMI, AL QAEDA ஆட்கள் மாடோ ஸ்ரீக்கு பிரியாணி எடுத்துச் செல்வார்கள். மும்பையில் தாவூத்-க்கு ஒரு நினைவிடம்கூட கட்டப்படும்" எனப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இதே வீடியோ இதே தலைப்புடன் பேஸ்புக்கில் பரவலாகப் பகிரப்பட்டது. அந்த பதிவில், "செம்பூரில் UBT வேட்பாளர் அனில் தேசாய் பிரசாரம். இந்தியாவில் ஒரு பாகிஸ்தான் கொடி. விரக்தியைப் பாருங்கள். பாலாசாகேப் எப்படி உணருவார். மகாராஷ்டிரா தேர்தல் ஆணையம் பொருத்தமான பதிலைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்" எனப் பகிரப்பட்டது.
உண்மை - சரிபார்ப்பு (Fact - Check):மும்பை செம்பூரில் சிவ் சேனா தலைவர் அனில் தேசாய் ரோட் ஷோவில் வைரலான வீடியோவில் உள்ள கொடி இஸ்லாமியக் கொடி என்றும், சமூக ஊடகப் பதிவுகளில் கூறப்படுவது போல் பாகிஸ்தான் கொடி இல்லை என்றும் BOOM கண்டறிந்துள்ளது.
வைரலான வீடியோவைப் பார்க்கும் போது, அந்தக் கொடி இஸ்லாமியக் கொடியே தவிர, பாகிஸ்தான் கொடி அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. வீடியோவில் காணப்படும் பச்சைக் கொடியில் வெள்ளை நிற பிறை மற்றும் நடுவில் நட்சத்திரம் உள்ளது.
இந்த கொடி பெரும்பாலும் மொஹரம் மற்றும் ஈத் மிலாத்-உன்-நபி ஊர்வலங்களில் காணப்படும். வைரலான வீடியோவில் உள்ள கொடியிலும் வெள்ளைப் புள்ளிகள் உள்ளன. அதேநேரம், பாகிஸ்தானின் தேசியக் கொடியிலும், இடது புறத்தில் வெள்ளை நிற நெடுவரிசை உள்ளது.