மதுரை: தை முதல் நாள் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதனுடன் மதுரை மாநகரையே அதிரச்செய்யும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் அரசு சார்பில் நடத்தப்படுகிறது. அதன்படி, இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. இதில் பகல் நேர நிலவரப்படி, எந்தெந்த காளைகள் வெற்றிப்பெற்றன, இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மாடுபிடி வீரர்கள் யார் என்பதைப் பார்க்கலாம்.
முக்கியமாக, வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை, நிராகரிக்கப்பட்ட காளைகள், வெற்றி வாகை சூடிய காளைகள், காயம், பிரச்னை என பல நிகழ்வுகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு உயிரூட்டியுள்ளன.
ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு:
அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் 1,100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சிறந்த காளைக்கு டிராக்டர் வாகனமும் மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு நிசான் காரும் பரிசு அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளனர். இந்த போட்டியில் இரண்டாயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை மாநகர காவல்துறை விதித்துள்ளது.
போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், மிக்சி, மின்விசிறி, கிரைண்டர், குக்கர், கட்டில், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதால், அவனியாபுரம் பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பில் முதல் சுற்றில் இறங்கக்கூடிய மாடுபிடி வீரர்கள் 75 பேர் பங்கேற்றனர்.
வெற்றிவாகை:
அதன்பின்னர் தொடங்கிய முதல் சுற்று போட்டியின் முடிவில் 73 மாடுகள் களம் கண்டன. 11 மாடுகள் பிடிபட்டன. தலா இரு மாடுகள் பிடித்த அவனியாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (மஞ்சள் நிற உடை எண் 38), கரடிக்கல்லைச் சேர்ந்த சுஜித்குமார் (மஞ்சள் நிற உடை எண் 16) ஆகிய இருவர் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளதாக போட்டிக் குழு அறிவித்தது.
இரண்டாவது சுற்றில், 82 மாடுகள் களம் கண்டன. 22 மாடுகள் பிடிபட்டன. ஆறு பேர் இந்த சுற்றில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் மூன்று காளைகளைப் பிடித்த சமயநல்லூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (சிவப்பு நிற உடை எண் 75), இரண்டு காளைகளைப் பிடித்த விக்னேஷ் (சிவப்பு நிற உடை எண் 88), இரண்டு காளைகளைப் பிடித்த இன்பசேகரன் (சிவப்பு நிற உடை எண் 86), இரண்டு காளைகளை அடக்கிய வாடிப்பட்டியைச் சேர்ந்த பிரஷாந்த் (சிவப்பு நிற உடை எண் 69), புதுக்கோட்டை வல்லரசு (சிவப்பு நிற உடை எண் 76), தேனூர் அஜய் (சிவப்பு நிற உடை எண் 82) ஆகியோர் ஆவர்.
இதனையடுத்து, நான்கு சுற்றுகள் என மொத்தம் ஆறு சுற்றுகள் காலை முதல் பகல் நேரம் வரை நடந்தது. இதில் தஞ்சாவூர் வெள்ளக்கல் இளையராணியின் காளை வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, அமைச்சர் மூர்த்தியிடம் காளை உரிமையாளர் இளையராணி பரிசு பெற்றார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வியின் காளை வெற்றி பெற்ற நிலையில், அவருக்கு பீரோ பரிசாக வழங்கப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், போட்டிகள் மிகச்சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், நாளை நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு, நாளை மறுநாள் நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆகியவை இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும், கடைசி நாள் போட்டியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பார் எனவும் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டில் சலசலப்பு
ஆறாவது சுற்றின் முடிவில் மொத்தம் 21 பேர் காயமடைந்துள்ளதாக போட்டி குழு தெரிவித்துள்ளது. மேலும், பார்வையாளர் ஒருவர் வயிற்றில் மாடு முட்டியதால் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், கீரைத்துறை சபா ரத்தினம் என்பவரது காளை வாடியில் இருந்து தாவி காளையர்கள் நடுவே குதித்தபடி வந்தது. அப்போது காளையை பிடிக்க முயற்சி செய்த மாடுபிடி வீரர்களை முட்டி பறக்கவிட்டு அந்த காளை வெற்றி பெற்றது. அந்த களையை பாராட்டி ஒரு சைக்கிள் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளையை மொத்தமாக பிடித்த வீரர்களை காளையின் உரிமையாளராக வந்த சிறுவன் தாக்கியுள்ளார். அதனைக் கண்ட போட்டியில் இருந்த சக மாடுபிடி வீரர்கள் சிறுவனைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க |
இன்றைய போட்டியில் 5-ஆவது சுற்றில் விளையாடிய காளை வாடிவாசலை விட்டு வெளியே சென்ற நிலையில் மீண்டும் வாடி வாசலுக்கு வந்து படுத்துக்கொண்டது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் காளையை அழைத்துச் சென்றனர். ஆனால், மீண்டும் அந்த காளையால் நடக்க முடியாமல் அதே இடத்தில் படுத்துக்கொண்டது. இதனால், ஐந்து சுற்றுகள் முடிந்த நிலையில் ஆறாவது சுற்றுக்கு போட்டியில் பங்கேற்க வீரர்கள் காத்திருந்தனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பகல் 2 மணி நிலவரப்படி, காளைகள் பரிசோதனையில் 659 காளைகள் பரிசோதனை செய்யப்பட்டு, போட்டிக்கு அனுமதிக்கப்பட்டது. அப்போது, 25 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.