சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் (CISF) சென்னை பழவந்தாங்கலில் உள்ள சிஐஎஸ்எப் அலுவலகத்தில் தங்கள் குடும்பத்தினருடன் தமிழ் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கோலாகலமாக கொண்டாடினர்.
குறிப்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பெரும்பாலானோர் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள். ஆனாலும், தமிழ் பாரம்பரிய முறைப்படி மஞ்சள் சுற்றிய பானையில் பொங்கல் வைத்து உரியடித்தல், கயிறு இழுத்தல், குழந்தைகளுக்கான போட்டி, சிலம்பம் சுற்றுதல் போன்ற விளையாட்டுகளை விளையாடி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி அருண் சிங் கலந்து கொண்டார். இதையடுத்து பொங்கல் வைத்து வழிபட்ட பின்னர் அனைவரும் பொங்கல் பரிமாறி உண்டனர்.
பின்னர் தமிழர் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை குறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி அருண் சிங் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், '' மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து கொண்டாடிய தமிழ் பாரம்பரிய பொங்கல் பண்டிகை மிகவும் நன்றாக இருந்தது. மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பொங்கல் பண்டிகை விழாவில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த ஆண்டு அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமைய பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
இதையும் படிங்க: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொண்டாடிய பொங்கல் விழா! புதுப்பானையில் பொங்கலிட்டு உற்சாகம்!
இந்த ஆண்டு சென்னை விமான நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு பிரிவையும் பலப்படுத்த உள்ளோம். இதற்கு முன்பு இருந்த குறைகளை கலைத்து தவறுகள் ஏதும் நடக்காமல் நடவடிக்கை எடுக்க உள்ளோம். அரசு கூடுதலாக மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை பணியில் சேர்த்து உள்ளது. இதன் மூலம் சென்னை விமான நிலையத்தில் அதிகளவில் பயணிகள் வந்தாலும் அதனை திறன்பட கையாண்டு சமாளிப்போம்.
சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்வது, மோப்ப நாய்களை வைத்து சோதனை செய்வதை அனைத்தையும் மேம்படுத்த உள்ளம். எனவே, இந்த ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சிறப்பான பணியை மேற்கொள்வார்கள்'' என இவ்வாறு கூறினார்.