புதுடெல்லி:அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு நாடாளுமன்ற மக்களவையில் இன்று இரண்டாவது நாளாக சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், திமுக உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் பேசினர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "அரசியலமைப்பு சட்டம் குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். இது சந்தோஷமான விஷயம். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்றம் திகழ்கிறது. இந்தியா ஜனநாயகத்தின் தாய் ஆகும். ஜனநாயகத்தை நிர்மாணித்தவர்கள் நாம்தான். அரசியலமைப்பு சட்ட அவையில் 15 பெண்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு பின்னணிகளில் இருந்து வெவ்வேறு தளத்தில் இருந்து வந்தவர்கள். இந்தியாவில் தொடக்கத்தில் இருந்தே பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதை அரசியலமைப்பு சட்டம் உரிமையாக கொடுத்திருக்கிறது. இது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.
ஒவ்வொரு பெரிய திட்டமும் பெண்களை மையப்படுத்தியே இருக்கிறது. இந்த அவையில் கூட பெண் எம்பிக்களின் பங்களிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும், பெண்களின் பிரதிநித்துவமும், பங்களிப்பும் நாட்டின் பெருமையாக கருதப்படும் விஷயமாக இருக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் பெண்களின் பங்களிப்பை ஒவ்வொரு இந்தியரும் உரத்து கூறுகின்றனர். நாட்டை 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவாக உருவாக்குவதே ஒவ்வொரு இந்தியரின் கனவாக இருக்கிறது.
"நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நாட்டின் ஒற்றுமையின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடந்தது. பன்முகத்தன்மையை நாம் கொண்டாடுகின்றோம். பொருளாதார ஒற்றுமைக்கு ஜிஎஸ்டி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரே நாடு, ஒரே வரி என்ற நிலையை இது முன்னெடுக்கிறது. ஒரு பகுதியில் மின்சாரம் இருந்தது இதர பகுதிகளில் மின்சாரம் இல்லை என்பது நமக்கு தெரியவந்தது. எனவே, ஒரே நாடு, ஒரே மின்பாதை கட்டமைப்பு என்பதை நாம் அமல்படுத்தினோம். நாம் ஒற்றுமையை வலுப்படுத்தினோம். வடகிழக்காக இருந்தாலும், இமாலயமாக இருந்தாலும், கட்டமைப்புகளை நாம் வலுப்படுத்தினோம்.
இன்றைக்கு நாம் அரசியலமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடுகின்றோம். அவசர நிலை பிரகடனம் கொண்டு வரப்பட்டபோது இந்த நாடே சிறை சாலையாக மாறியது. மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. சுதந்திரமான ஊடகத்துக்கு பூட்டுப்போடப்பட்டது. இது காங்கிரஸுக்கு ஏற்பட்ட கறையாகும், அவசர நிலை பிரகடனம் ஜனநாயகத்தை கொலை செய்ததால் வரலாற்றில் இருந்து ஒருபோதும் மறையாது" என்று கூறினார்.
சாவர்க்கரை கேலி செய்யும் பாஜக:முன்னதாக இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,"பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் சித்தாந்தவாதியாக பார்க்கப்படும் சாவர்க்கர், அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியர்களுக்கு எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார். அதற்கு பதில் அவர், மனுஸ்மிருதியை இந்து மத புத்தகமாக முதன்மையானதாக கருதினார். அரசியலமைப்பு சட்டமானது நவீன இந்தியாவின் ஆவணம் ஆகும். பண்டைய இந்தியா பற்றிய தகவல் இல்லாமலோ அல்லது இந்திய தாயின் கொள்கைகள் இல்லாமலோ எழுதப்படவில்லை.
ஆனால் சாவர்க்கர், வேதங்களுக்குப் பிறகு இந்துகள் மிகவும் வழிபடத்தக்க வகையில் மனுஸ்மிருதி உள்ளதாக கூறியுள்ளார். ஆனால், இப்போது நீங்கள்(பாஜக), அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆதரவாக பேசுவதை கேட்பது அருமையாக இருக்கிறது. இந்த தருணத்தில் நீங்கள் உங்கள் தலைவர்களின் வார்த்தைகளுக்கு உடன்படுகின்றீர்களா என்று கேட்க விரும்புகின்றேன். நீங்கள் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது பற்றி பேசும்போது நீங்கள் சாவர்க்கரை கேலி செய்வது போலவும், துஷ்பிரயோகம் செய்வது போலவும் உள்ளது,"என்றார்.
இந்து ராஜியம்:அரசியலமைப்பு சட்டம் குறித்த சிறப்பு விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக எம்பி ஆ.ராசா, "தேர்தலுக்கு முன்பு இந்து ராஜியம் உருவாக்கப்படும் என்று பேசப்பட்டது,"என்று கூறினார். இதற்கு ஆளும் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் ஆ.ராசாவுக்கும், பாஜக உறுப்பினர்களுக்கும் இடையே கூச்சம் குழப்பம் நேரிட்டது.
எனினும் தொடர்ந்து பேசிய ஆ.ராசா, பாஜக உறுப்பினர்களை விமர்சனம் செய்தார். இதற்கு பாஐக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் இருக்கையில் இருந்த ஜெகதாம்பிகா பால், பாஜக குறித்து ஆ.ராசா குறித்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.