புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்துக்கு நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதேபோன்று, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்துக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 9.63 கோடி வாக்காளர்களும், ஜார்க்கண்டில் மொத்தம் 2.6 கோடி வாக்காளர்களும் உள்ளனர் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியும், ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சியில் உள்ளன.மொத்தம் 288 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் ஆயுட்காலம் நவம்பர் 26 ஆம் தேதியும், 81 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்தின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதியும் முடிவடைகிறது.
இதனையடுத்து இரு மாநிலங்களின் சட்டமன்றத்துக்கு பொதுத் தேர்தல் நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இடைத்தேர்தல்: உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 47 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கும் நவம்பர் 13 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் டெல்லியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலி, கேரளாவின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இவ்விரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றதையடுத்து வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அங்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.