மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினரைக் கல்வி, சமூக ரீதியாக பின் தங்கிய வகுப்பினர்களாக அறிவித்து அவர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் 16 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே பாட்டீல், நவி மும்பையிலுள்ள அசாத் மைதானத்தில் கடந்த 19ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
அனைத்து மராத்தியர்களுக்கும் குன்பி (குன்பி என்பது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஓபிசி-ஐ குறிக்கும்) சான்றிதழ் வழங்க வேண்டும், கல்வியில் இலவசம், அரசு வேலை வாய்ப்புகளில் மராத்தியர்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார் மனோஜ் ஜராங்கே பாட்டீல்.
இந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இன்று (ஜன.27) காலை மனோஜ் ஜராங்கே பாட்டீல் நேரில் சந்தித்து அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொள்வதாகக் கூறி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதால், உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாகவும், மாநில அரசு 54 லட்சம் மராத்தா சமூகத்தினர்களுக்கு குன்பி சான்றிதழை விரைவில் வழங்க வேண்டும் எனவும் மனோஜ் ஜராங்கே பாட்டீல் கூறினார்.
முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு மராத்தா சமூகத்தினருக்கான 16 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கச் சட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. ஆனால் இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதன் பின்பு, கடந்த 2021ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி கல்லூரி, உயர் கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்புகளில் மராத்தியச் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் போது, 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீறுவதற்கான நியாயமான காரங்கள் எதுவும் இல்லை என கூறி அந்த 16 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதன் பின்பு, பல முறை அரசுக்குக் கோரிக்கை வைத்தும் அறிவிக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நாடாளுமன்றத் தேர்தலுக்கு முதல் கட்சியாக வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர்!