பெங்களூரு:பற்றவைத்த பட்டாசு மீது ஒரு பொருளை வைத்து அதன் மீது பந்தையத்திற்காக அமர்ந்த இளைஞருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தீபாவளி தினமான அக்டோபர் 31ஆம் தேதி பெங்களூருவின் கோனகுண்டே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீவர்ஸ் காலனியில் நடந்துள்ளது. பட்டாசு வெடித்ததில் படுகாயமடைந்த உயிரிழந்த இளைஞரின் பெயர் சபரீஷ் என்பது தெரியவந்துள்ளது.
அக்டோபர் 31 இரவு, குடிபோதையில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள், பட்டாசுகளை பற்ற வைத்துக் கொண்டே பெட்டியின் மீது ஒரு பெட்டியை வைத்து சபரீஷை உட்கார வைத்து சவால் விடுத்துள்ளனர். மது போதையில் இருந்த சபரீஷ், பட்டாசு வெடிக்கும் வரை அதன் மீது வைக்கப்பட்ட பொருளில் உட்கார்ந்தால், ஆட்டோ ரிக்ஷா கொடுக்க வேண்டும் என்று பந்தயம் கட்டினார்.
தொடர்ந்து, அதிக வெடிமருந்துகள் கொண்ட பட்டாசுகளை வைத்து, அதன்மீது ஒரு பொருளை வைத்து உட்கார்ந்த சபரீஷ், கீழே இருக்கும் பட்டாசுகளை நண்பர்களிடம் கொளுத்தும்படி சொன்னார். அனைவரும் மதுபோதையின் உச்சத்தில் இருந்த நிலையில், பட்டாசைக் கொளுத்திவிட்டு ஆரவாரத்துடன் அங்கிருந்து விலகி ஓடினர்.