டெல்லி:மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதில் உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவது முன்கூட்டியே எழுதப்பட்டது என்றும் அதனால் ஆட்சிக்கு வந்ததும் முதல் 100 நாட்களில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என வகுத்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட சாதனைகள் பற்றி கூறிய பிரதமர் மோடி அதன் மூலம் 140 கோடி இந்திய மக்களின் நம்பிக்கையை வெனறதாக தெரிவித்தார். தனது முதல் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு துறைகளில் காங்கிரஸ் கட்சி தோண்டிய குழிகளை மூடி உலக அரங்கில் இந்திய நாட்டை நிலை நிறுத்த வேண்டிய பணியில் தான் ஈடுபட வேண்டியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, இந்திய மக்களுக்கு சேவை செய்வதில் உள்ள நம்பிக்கை குறித்து பேசிய அவர், 140 கோடி இந்திய மக்களின் நம்பிக்கை, விருப்பம் மற்றும் எண்ணங்களை நிறைவேற்றுவது போன்ற பொறுப்பான பதவியில் இருப்பது கடவுளின் ஆசீர்வாதமாகக் கருதுவதாக கூறினார். உலகின் சூப்பர் பவராக இந்தியாவை மாற்ற எதோ ஒரு தெய்வீக சக்தி தன்னை இயக்குவதை அடிக்கடி உணர்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இது போன்ற சிறிய சிந்தனைகள் தன்னை ஊக்கப்படுத்தி நாள்தோறும் கூடுதல் ஈடுபாடு மற்றும் கவனத்துடன் செயல்பட உதவுவதாக மோடி குறிப்பிட்டார். வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்த 25 கோடி மக்கள் அரசின் சீரான நடவடிக்கைகளால் நல்ல வாழ்வை பெறும் சூழ்நிலைக்கு சென்று உள்ளதாக பிரதமர் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, அரசின் நேரடி பணப்பரிமாற்ற திட்டத்த்தின் மூலம் 3.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் ஒழிக்கப்பட்டதாகவும், அரசின் திட்டங்கள் நேரடியாக பயனாளிகளை சென்றடைய வழிவகுத்ததாகவும் கூறினார். நாட்டில் டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய போது கேலிக் கூத்துகளுக்கு ஆளானதாகவும் ஆனால் தற்போது இந்தியா டிஜிட்டல் பொருளாதாராத்தில் வளர்ந்த நாடாக மறியுள்ளதாக கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது குறித்து பேசிய பிரதமர் மோடி, கடந்த 2023ஆம் உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கயதை உறுதி செய்ததாக கூறினார்.
மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தால் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளன என்பது குறித்து பேசிய பிரதமர் மோடி, 2047ஆம் ஆண்டுக்குள் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்று, உலகளவில் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக இந்தியாவை கொண்டு வர வேண்டும் என்ற தனது லட்சியத்திற்கான பணிகளை தொடரப் போவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதும் முதல் 100 நாட்களில் என்னென்ன திட்டங்கள் அமல்படுத்த வேண்டும் என்பது குறித்த பணிகளில் தற்போது முதலே ஈடுபடத் தொடங்கி உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். மேலும், முதலமைச்சராக பணியாற்றி பல அனுபவங்களை கொண்ட மிகச் சில பிரதமர்களில் தானும் ஒருவன் என்றும் அதனால் மாநிலங்களின் கவலைகளை எளிதில் புரிந்து கொள்வதில் தான் பொருத்தமானவன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ஆட்சிக்கு வந்த பிறகு, அரசின் பணி கலாச்சாரத்தை மாற்றியதாகவும் முதன்முறையாக, தங்கள் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காணும் என்ற எண்ணத்தை மக்கள் உணர்ந்ததாகவும் கூறினார். அரசின் தொடர்சியான நடவடிக்கைகளால் 4 கோடி மக்களுக்கு சொந்த வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
பெண்களின் கண்ணியத்தை காக்கும் வகையில், இஸ்ஸத்கர்ஸ் என்ற பெயரில் நாடு முழுவதும் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு வீட்டுக்கும் தற்போது பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் கிடைப்பதாக பிரதமர் மோடி கூறினார். நாடு முழுவதும் 11 கோடி பெண்களுக்கு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
இதையும் படிங்க:மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட்- ஒலிம்பிக்கில் விளையாடுவது சந்தேகம்? பஜ்ரங் புனியாவின் விளக்கம் என்ன? - National Suspends Bajrang Punia