மதுரை: நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் நேரிடையாக கலக்காது என நெல்லை மாநகராட்சி ஆணையர், சுக புத்ரா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். மேலும் இது குறித்த பணிகளை வரும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராசு, கடந்த 2018ல் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்திருந்த மனுவில், "திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி ஆற்றின் கரையில் பழமையான மண்டபங்கள், படித்துறைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்குமாறும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், ஆற்றை தூய்மையாக பராமரிக்குமாறும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இதையும் படிங்க : மனமகிழ் மன்றங்களில் விதிமீறி உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் மது விற்பனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு
இந்த மனு இன்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,
ஆஜரான நெல்லை மாநகராட்சி ஆணையர், சுக புத்ரா,"மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வெளியேறும் கழிவு நீரை தாமிரபரணி ஆற்றில் கலப்பதை தடுக்கும் பணிகளை பல கட்டங்களாக மேற்கொண்டு வருகின்றோம். இரண்டாவது கட்ட பணிகள் வரும் டிசம்பர் மாதம் நிறைவடைந்து விடும். மூன்றாவது கட்டப்பணிகள் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்து விடும். அதன்பிறகு நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் , தாமிரபரணி ஆற்றில் நேரிடையாக கலக்காது,"என விளக்கம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே முக்கியம். எனவே, வருகிற ஞாயிற்றுக்கிழமை நாங்கள் ( நீதிபதிகள்) நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் , தாமிரபரணியில் கலக்கும் பகுதிகளையும் மற்றும் பல பகுதிகளையும் நேரில் சென்று கள ஆய்வு செய்ய உள்ளோம். மேலும் மனுதாரர் தாமிரபரணி ஆற்றில் பிற இடங்களில் கழிவு நீர் கலக்கும் பகுதிகளை வீடியோ பதிவு செய்து,நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்," என்று கூறி வழக்கு விசாரணையை வருகிற 10ம் தேதி ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்