மயிலாடுதுறை: பருவம் தவறி கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துள்ளது. இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் முழுவதும் மழை நீரில் தேங்கி அழுகியுள்ளது. மழை விட்டு இரண்டு நாட்களாகியும் தண்ணீர் வெளியேறாததால் நெற்பயிர்கள் அழுகியதுடன், துர்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள விவசாயிகள், சுமார் 1,70,000 ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி செய்துள்ளனர். இந்த நெற்பயிர்கள் முற்றி அறுவடைக்கு தாயர் நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பரும மழை தவறி பெய்த கனமழையின் காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, கீழையூரைச் சேர்ந்த விவசாயி பாண்டிதுரை, “தரங்கம்பாடி தாலுகா கீழையூர் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கரில் விவசாயிகள், சம்பா தாளடி சாகுபடி செய்திருந்தனர். பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்ததால், விவசாயிகள் அறுவடை பணிகளை தொடங்கினர். சுமார் ஐந்து ஏக்கரில் அறுவடை நடைபெற்றிருந்த நிலையில், அறுவடை தொடங்கிய முதல் நாளிலேயே பருவம் தவறி கனமழை பெய்துள்ளது.
சேதமடைந்த நெற்பயிர்கள்:
மழையின் காரணமாக அறுவடை பணிகள் தொடங்கிய நிலையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தரங்கம்பாடி தாலுகாவில் ஒரே நாளில் 12 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்ததால், கீழையூர் கிராமத்தில் 1,700 ஏக்கரின் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் முழுமையாக வயலில் சாய்ந்து, தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
இதையும் படிங்க: பருவம் தவறிய மழையால் சேதமான பயிர்கள்.. மயிலாடுதுறை விவசாயிகள் வேதனை!
தொடர்ந்து, மழை விட்டு இரண்டு நாட்களாகியும் தண்ணீர் வடியாமல், தண்ணீரிலேயே மூழ்கிய நெற்பயிர்கள் துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியில், வடிகால் வசதியும் சரிவர செய்து தரப்படாததால், தண்ணீர் வடிய வழியின்றி நீரில் மிதக்கும் நெற்பயிர்கள் முளைக்க தொடங்கும் அபாய நிலையில் உள்ளது. எனவே, 100 சதவீதம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் கீழையூர் கிராமத்திற்கு முழு நிவாரண தொகையை அரசு அறிவிக்க வேண்டும்.
இது குறித்து, உரிய கணக்கெடுப்பு நடத்தி உரிய காப்பீட்டுத் தொகையை அறிவிக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக கீழையூரை ஊராட்சிக்கு நிவாரணம் மற்றும் காப்பீடு தொகை கிடைக்கவில்லை” என விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர்.