சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த 100 விவசாயிகள் முதன்முறையாக சென்னை – தூத்துக்குடி வரை விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர்.சுரேஷ். ஸ்பிக் உர நிறுவனத்தின் டீலர்ஷிப் அனுமதி பெற்ற 'பிருந்தா ஏஜென்சி' என்னும் உரக்கடையை நடத்தி வருகிறார். இவரிடம் பல ஆண்டுகளாக உரம் வாங்கும் திருக்கழுக்குன்றம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகளிடம், அன்பாகவும் நன்மதிப்புடனும் பழகி வந்துள்ளார்.
தன்னிடம் வாடிக்கையாளர்களாக உள்ள விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிய சுரேஷ், ஸ்பிக் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையை சுற்றிப்பார்க்கவும், அங்குள்ள சிறப்பு மண்பரிசோதனை கூட்டத்தை பார்க்கவும் அனுமதி பெற்றிருக்கிறார்.
இதனையடுத்து திருக்கழுக்குன்றம் சுற்று வட்டார 21 கிராமங்களைச் சேர்ந்த 100 விவசாயிகளைத் தேர்வு செய்து, இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் இண்டிகோ விமானத்தில் அனுப்பிவைத்தார். முன்னதாக ஸ்பிக் நிறுவனத்தின் விற்பனை பிரிவு இயக்குநர் எஸ்.நாராயணன் சென்னை விமான நிலையத்தில் விவசாயிகளுக்கு ரோஜா பூக்களைக் கொடுத்து விமானத்தில் செல்ல வழியனுப்பினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள்,"தங்கள் வாழ்நாளில் விமானத்தை ஆகாயத்தில் மட்டுமே பார்த்து உள்ளோம். ஆனால் முதல் முறையாக பயணிக்கப் போகிறோம் என்பதை நினைக்கும் போது மிகுந்த ஆர்வாக உள்ளது. இதனை ஏற்பாடு செய்து கொடுத்த நிறுவனத்தினருக்கு எங்களது மனமார்ந்த நன்றி,"என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாலாஜாபேட்டையில் ரூ.1.31 கோடியில் புனரமைக்கப்பட்ட ஆங்கிலேயர் கால குளம்.. திறப்பு எப்போது?
இது குறித்து ஸ்பிக் நிறுவன விற்பனை பிரிவு இயக்குநர் எஸ்.நாராயணன் கூறுகையில், "இந்தியாவைப் பொருத்தவரை சிறு குறு விவசாயிகள் தான் 60 சதவிகிதம் விளை பொருளை விளைவிக்கிறார்கள். உணவு உற்பத்தியை அதிகரிக்கும் பெறும் பொறுப்பும் விவசாயிகளிடத்தில் உள்ளது. இவர்கள் 100 பேர் விமானம் மூலம் தூத்துக்குடி அழைத்துச் சென்று அங்குள்ள உர நிறுவனத்தை பார்வையிட வைக்க உள்ளோம். விமானத்தில் முதல் முறையாக பயணம் மேற்கொள்வது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பிருந்தா ஏஜென்சி உரிமையாளர் டாக்டர் சுரேஷ் பேசும்போது," எங்களின் நிறுவனம் வெள்ளி விழா கொண்டாடவுள்ளது. அதனை முன்னிட்டு ஆயிரம் விவசாயிகளை விமானத்தில் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளோம். அதன் முதற்கட்டமாக 21 கிராமங்களைச் சேர்ந்த 100 விவசாயிகளைத் தூத்துக்குடி அழைத்துச் செல்கிறோம். சூரரை போற்று திரைப்படத்தில் நடிகர் சூர்யா, அனைவரும் விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என திட்டமிடுவார். அதே போன்ற ஒரு முன்முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என விரும்பினோம் அதன் வெளிப்பாடுதான் இது என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்