சென்னை: தாயின் மருத்துவ சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாடி உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், ரம்மி உள்ளிட்ட சூதாட்ட செயலிகளை தடை செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், சென்னை சின்னமலையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் கொடுத்த தகவலின்படி, ''சென்னை, சைதாப்பேட்டை சின்னமலை ஆரோக்கிய மாதா இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (26). இவர் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு அவ்வப்போது கேட்டரிங் தொடர்பான வேலை பார்த்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: நெல்லை கோர்ட் வாசல் கொலை; கவனக்குறைவாக இருந்த காவலர்கள்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
இவரது தந்தை கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார். தாய் மற்றும் அண்ணனுடன் வசித்து வந்த ஆகாஷ் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார். சிறிய அளவில் பணம் கட்டி விளையாடி வந்தவர் கால போக்கில் ரம்மி விளையாட்டிற்கு முழுமையாக அடிமையாகியுள்ளார்.
இழந்த பணத்தை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் தொடர்ச்சியாக விளையாடி வந்த சூழலில், கேன்சர் நான்காவது கட்ட பாதிப்பால் அவதிப்பட்டு வரும் தனது தாயின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார். சிகிச்சைக்காக வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் அவரது தாய் மற்றும் அண்ணண் நேற்று கடுமையாக திட்டியுள்ளனர்.
இந்த நிலையில், தாய் திட்டிய பிறகு ஆகாஷை காணாததால் அவரது தாயும் அண்ணனும் தேடி வந்துள்ளனர். இரவும் காணாததால் ஆகாஷின் அண்ணன் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள அறையில் ஆகாஷ் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடப்பது தெரிய வந்தது. சடலத்துடன் அருகில் இருந்த மருத்துவமனை சென்ற நிலையில் ஆகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பபட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.