சென்னை: பாஜக மீது அதிமுகவிற்கு பயம் உள்ளது. எனவேதான் மாநில உரிமைகளை பறிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது என துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பாரிமுனை பிரகாசம் சாலையில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்ச்சியும், 2500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்து அறநிலையதுறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், காங்கிரஸ் முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ் மற்றும் பேராயர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "ஒட்டு மொத்த மக்களும் கொண்டாடும் நிகழ்ச்சியாக கிருஸ்துமஸ் இருந்து வருகிறது. அனைத்து மதங்களும் அன்பை மட்டுமே வெளிப்படுத்துகிறது. ஆனால் சிலர் மதத்தை வைத்து வெறுப்பு கருத்துகளை பரப்பி வருகின்றனர். அலகாபாத் நீதிபதி ஒருவர் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கருத்துகள் பொதுவெளியில் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக அவரை பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: ஆளுநரை மாற்ற கோரிக்கை விடுக்கப்படுமா? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!
ஆனால் அதற்கு அதிமுக எம்பிக்கள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. காரணம் என்ன என்றால் பாஜக மீது அதிமுகவிற்கு பயம் உள்ளது. இதேபோல் மாநில உரிமைகளை பறிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவதூறாக பேசிய அமித்ஷாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் அதுகுறித்து எதிர்கட்சி தலைவரான எடப்பாடி கே பழனிச்சாமியிடம் கேட்டபோது ஜெயக்குமாரின் நிலைப்பாடு தான் எங்களுடைய நிலைப்பாடு என கூறுகிறார்.
சென்னை கிழக்கு மாவட்டக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அன்பின் கிறிஸ்துமஸ் 2024’ விழாவில் துறைமுகம் தொகுதியில் உள்ள பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் இன்று பங்கேற்றோம்.
— Udhay (@Udhaystalin) December 21, 2024
பாதிரியார்கள் - கன்னியாஸ்திரிகள் - பொதுமக்கள் உட்பட 2500 பேருக்கு கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கி… pic.twitter.com/o1ktGyuR0w
ஜெயகுமாரோ அமித்ஷா பேசியதற்கு பாஜக பின்விளைவுகளை சந்திக்கும் என கூறுகிறார். அதிமுகவும், பாஜகவும் கள்ள கூட்டணியில் இருப்பதாக பேசப்பட்டாலும் அவர்களின் கூட்டணி நல்ல கூட்டணியாகவே உள்ளதை மக்கள் தற்போது அறிவார்கள். அதனால் தான் தற்போது நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழுவில் பாஜகவிற்கு எதிராக ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை. இதனை பார்க்கும் போது கலைஞர் கூறிய நிழல் கதை தான் நியாபகத்திற்கு வருகிறது. ஒரு பாம்பு வெயிலில் ஊர்ந்து சென்றபோது வெயிலின் வெப்பம் தாங்காமல் தன் தலையையும், உடலையும் உயர்த்தி வாலால் ஊர்ந்து சென்றது. அதற்கு கீழே ஒரு தவளை பாம்பின் நிழலில் இருந்து கொண்டது. பாம்பும், தவளையுமாக அதிமுகவும், பாஜகவும் இருந்து வருகிறது. தவளை ஏதாவது சிக்கல் கொடுத்து அதனை பாம்பு பார்த்தால் தவளைக்கு என்ன நடக்குமோ அந்த நிலையில் தான் தற்போது அதிமுக இருந்து வருகிறது,"என தெரிவித்தார்.