புதுடெல்லி: நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று கூறியுள்ளார்.
குறிப்பிட்ட நாட்களில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்தும் மத்திய அரசின் பரிந்துரைக்கு குடியரசுத் தவைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளி்த்துள்ளார் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வாக, அரசியலமைப்பு சட்டத்தை நாம் ஏற்றுகொண்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் விதத்தில், அரசியலமைப்பு தினமான நவம்பர் 26 ஆம் தேதி, நாடாளுமன்ற மைய கட்டடத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ரிஜிஜு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அனைத்து தனியார் சொத்துகளையும் அரசு கையகப்படுத்த முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வக்ஃபு திருத்தச் சட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழு தமது பரிந்துரை அறிக்கையை நவம்பர் 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய கூட்டத்தொடர்களில் அறிக்கையை சமர்ப்பிக்க இக்குழுவுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டதன் அடிப்படையில் எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.