சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டி அவரது சொந்த ஊரான திருவையாறு அருகில் உள்ள துளசீந்திரபுரம் பகுதியில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய துணை அதிபரும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரீஸ் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர். திருவையாறு அருகில் உள்ள துளசீந்திரபுரத்தில்தான் கமலா ஹாரீஸ் தாயார் சியமளா கோபாலான் பிறந்தார்.
இங்கு உள்ள ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் கமலா ஹாரீசின் தாய் சியமளா கோபாலனின் குலதெய்வ கோவிலாகும். இந்த கோவிலை புணரமைப்பதில் கமலா ஹாரீசின் தாத்தா பி.சி.கோபாலன் என்பவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். கமலா ஹாரீஸ் தமது குல தெய்வம் கோயிலுக்கு வர முடியாவிட்டாலும், அவரது உறவினர்கள் தொடர்ந்து இந்த குலதெய்வம் கோவிலுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கமலா ஹாரீஸ் துணை அதிபராக பதவி ஏற்றபோது துளசீந்திரபுரம் கிராம மக்கள் அவருக்காக சிறப்பு பூஜைகள் மேற்கொண்டனர். பரஸ்பரம் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டனர். அண்மையில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரீஸ் அறிவிக்கப்பட்டது முதலே அவர் அதிபராக வெற்றி பெற வேண்டும் என்று துளசீந்திரபுரம் மக்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கமலா ஹாரிஸ் - ட்ரம்ப் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் ஹைலைட்ஸ்!
இந்த நிலையில் துளசீந்திரபுரம் கோவில் கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதில் உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இது குறித்து ஐஏஎன்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள உள்ளூர்வாசியான குமரேசன் என்பவர், "ஒட்டு மொத்த கிராம மும் கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டும் என்று பிராத்திக்கிறது. அவர் வெற்றி பெறுவதற்காக இங்குள்ள ஸ்ரீதர்மசாஸ்தா கோவில் மட்டுமின்றி பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.உலகளாவிய அளவில் தாக்கம் செலுத்தும் பதவிக்கு அவர் போட்டியிடுகின்றார். அவர் பிறந்த ஊரில் இருப்பதை பெருமையாக கருதுகின்றோம். அவர் வெற்றி பெற பிராத்திக்கின்றோம்," என்றார்.
மேலும், கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டி துளசீந்திரபுரம் பகுதியில் துணி பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. துளசீந்திரபுரம் கிராம மக்கள் கமலா ஹாரீசை தமது சொந்த மண்ணின் மகளாகவே கருதுகின்றனர். எனவே அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ் வெற்றிபெற்றால் தர்மசாஸ்தா கோவில் சார்பாக அன்னதானம் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்