டெல்லி:கடந்த 2013 முதல் 2018 வரையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த டிகே சிவகுமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் டிகே சிவக்குமாருக்கு எதிராக சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தது. இந்நிலையில், சிபிஐயின் எப்ஐஆரை எதிர்த்து 2021ஆம் ஆண்டு டிகே சிவகுமார் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி சிபிஐயின் எப்ஐஆரை எதிர்த்து சிவகுமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர் நீதிமன்றம் மூன்று மாதத்திற்கு விசாரணையை நிறைவு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டிகே சிவகுமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பீலா எம் திரிவேதி, எஸ் சி சர்மா ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், டிகே சிவகுமாரின் மனிவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.