டெல்லி : டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார். மேலும், ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை தொண்டர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக ராஜ் குமார் ஆனந்த் தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழலுக்கு எதிரான ஆட்சியை கொடுக்கவே ஆம் ஆத்மி கட்சி தோற்றுவிக்கப்பட்டதாகவும் தற்போது அதே கட்சி ஊழலில் திளைப்பதாகவும் குற்றம் சாட்டினார். அமைச்சர் பதவியில் தொடர்வது என்பது கடினமாக காணப்படுகிறது. ஊழலுடன் எந்த பெயரையும் இணைக்க முடியாது.
அதனால் அமைச்சர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்தார். மேலும், அரசியல் மாறினால் நாடு மாறும் என்று கூறியவர் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால் இன்று அரசியல் மாறவில்லை அரசியல்வாதிகள் மாறிவிட்டனர் என்று தெரிவித்தார்.
சமுதாயத்திற்கு உழைப்பதற்காக நான் அரசியலுக்கு வந்தேன். அதேநேரம் பட்டியலின பிரதிநிதித்துவம் பற்றி பேசும் போது பின்வாங்கும் கட்சியில் இனி பணியாற்ற விரும்பவில்லை. அதேநேரம் எந்த கட்சியிலும் சேரவில்லை என்றும் ராஜ் குமாஅர் ஆனந்த் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், டெல்லியை பொறுத்தவரை ஆம் ஆத்மி கட்சிக்கு 13 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர்.
அதில் ஒருவர் கூட பட்டியலினத்தை சேர்ந்தவர் இல்லை. ஒரு பெண் கூட இல்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பட்டியலின எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு கட்சியில் மரியாதை என்பது துளியும் இல்லை. இந்த சமயத்தில் பட்டியிலன சமுதாய மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இத்தனை காரணங்களை முன்வைத்து ஆம் ஆத்மி கட்சியில் தொடர விரும்பவில்லை என ராஜ் குமார் ஆன்ந்த் தெரிவித்தார்.
இதையும் படிங்க :பதஞ்சலி விளம்பர வழக்கு: பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க மறுப்பு! ஏன் அலட்சியம் காட்டக் கூடாது?- உச்சநீதிமன்றம் கேள்வி! - Patanjali Advertising Case