டெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு எதிரான கைது நடவடிக்கை மற்றும் அமலாக்கத்துறையின் காவலை எதிர்த்தும் இடைக்கால நிவாரணம் கோரியும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்று (மார்ச்.27) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, கெஜ்ரிவாலின் கைது அரசியல் பழிவாங்கும் செயல் என்றும் அவர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை மக்களவை தேர்தல் நேரத்தில் முடக்க செய்யப்படும் நடவடிக்கை என்றும் வாதிட்டார். அதேபோல் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் குறித்து பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுவர்ண காந்த சர்மா, வழக்கில் இருந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுப்பு தெரிவித்தார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டார்.