டெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மாதம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் மகளும் எம்எல்சியுமான கவிதா ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்தது. இருவம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இருவரது நீதிமன்றக் காவலும் நிறைவு பெற்ற நிலையில் டெல்லி திகார் சிறையில் இருந்த படி காணொளிக் காட்சி வாயிலாக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை மே 7ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதேபோல், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் மகளும் எம்எல்சியுமான பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் நீதிமன்றக் காவலையும் மே 7ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா எம்எல்சி கவிதாவை கடந்த மார்ச் 15ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக கவிதாவிடம் அமலாக்கத்துறை முதல்கட்ட விசாரணை நடத்திய நிலையில், அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து மதுபான கொள்கை முறைகேடு வழக்கு குறித்து விசாரிக்க கவிதாவை சிபிஐ காவலில் எடுத்து உள்ளது. கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கவிதாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.