டெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் அவருக்கு நாள்தோறும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக சர்கரையின் அளவு அதிகரித்து கொண்டே சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தனக்கு இன்சுலின் மருந்து வழங்க வேண்டும், தனது தனிப்பட்ட குடும்ப மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனைகள் பெற தினசரி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேச அனுமதிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் சிறை நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினார். இருப்பினும், அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கைகளை சிறை நிர்வாகம் நிராகரித்தது.
இதையடுத்து திகார் சிறையில் வைத்து அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதித் திட்டம் நடப்பதாக அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திகார் சிறையின் முன் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
இதனிடையே இன்சுலின் மற்றும் குடும்ப மருத்துவரை வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் தினமும் சந்தித்து பேச அனுமதிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை நீதிபதி காவேரி பவேஜா விசாரித்தார். அப்போது கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்த அவர், கெஜ்ரிவாலுக்கு ரத்தத்தில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இன்சுலின் ஊசி அவசியமா? என்பதை ஆய்வு செய்யவும், அவரது மற்ற உடல் நலப் பிரச்சினைகளை ஆய்வு செய்யவும் மருத்துவர்கள் குழு நியமிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு 320ஐ தாண்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் இன்சுலின் செலுத்தி உள்ளனர். இன்சுலின் விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சரியான முடிவை எடுத்து உள்ளதாகவும், அவருக்கு இன்சுலின் தேவையில்லை என்று தெரிவித்த பாஜக தலைமையிலான மத்திய அரசு தற்போது எதற்கு அவருக்கு இன்சுலின் மருந்தை செலுத்தி உள்ளது என்று ஆம் ஆத்மி அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க :தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து என்ஜினியர் பலி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு! - Engineer Fall Water Tank Hyderabad