வேலூர் : வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் தஞ்சான் (35). இவர் அரியூரில் தனவேல் மளிகை கடை என்ற பெயரில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இருந்து இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 12 மாதங்கள் தீபாவளி சீட்டாக மாதம் ரூ.1000 வீதமும், அதேபோல் தீபாவளி கறி சீட்டு என்ற சீட்டையும் நடத்தி 3 ஆயிரம் பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளார்.
தீபாவளி சீட்டில் அடங்கும் பொருட்கள் : தீபாவளி சீட்டின் முடிவில் தங்க நாணயம் 2 கிராம், பட்டாசு 1 பாக்ஸ், ஆயில் 5 லிட்டர், துவரம் பருப்பு 5கி, கடலைபருப்பு 5கி, உளுந்தம் பருப்பு 5கி, பைத்தம் பருப்பு 1கி, வெல்லம் 2கி, சர்க்கரை 2கி, ஸ்வீட் 1கி, காரம் 1கி, கோதுமை மாவு 5கி, ஆட்டிறைச்சி 1 கி, கோழிறைச்சி 1கி ஆகியவைகள் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க : விஜயை ஒரே மேடையில் சந்திப்பாரா திருமாவளவன்?
ஒரு ஆண்டு முடிந்த நிலையில் தீபாவளி சீட்டாக பணம் செலுத்தியவர்களுக்கு தீபாவளி நெருங்கிய போது, தங்க நாணயமும், பட்டாசும் வழங்காமல் மீதமுள்ள அனைத்து பொருட்களையும் வழங்கி உள்ளார். இதனைக்கேட்டால் தங்கம் விலை உயர்ந்து விட்டதால் ஆளுக்கு ரூ.2 ஆயிரம் மீண்டும் வழங்க வேண்டுமென கூறி பணத்தை வசூல் செய்துள்ளார்.
ஆனால், சொன்னதைப் போல் தங்க நாணயம் வழங்காததால், கீழ் பெண்ணாத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் அரியூர் காவல்நிலையத்தில் தஞ்சான் மீது கடந்த நவ 2ம் தேதி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், அரியூர் போலீசார் தஞ்சானை கடந்த 3ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவர் இறைச்சிக்காக வாங்கி வைத்திருந்த 98 ஆடுகளையும் அரியூர் காவல்துறையினர் பறிமுதல் செய்து ஒரு குடோன் பகுதியில் அடைத்து வைத்திருந்தனர். ஆனால் கடந்த 3 நாட்களாக ஆடுகளுக்கு குடிக்க தண்ணீரோ, எந்தவித உணவும் காவல்துறை சார்பில் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் உணவின்றி 4 ஆடுகள் இறந்து போனதாக அப்பகுதி மக்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குடோனில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை இன்று வேறு நபர் மூலம் மேய்ச்சலுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்