புதுடெல்லி:இந்திய விமானபடையில் பணியாற்றி வந்த லெப்டினன்ட் தற்கொலை செய்து கொண்ட மறுநாள் இந்திய ராணுவத்தில் கேப்டனாகப் பணிபுரிந்த அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானபடையில் லெப்டினன்ட் ஆக பணியாற்றிய தீன்தயாள் தீப், அவரது மனைவி இந்திய ராணுவ கேப்டன் ரேணு தன்வார் ஆகிய இருவரும் ஆக்ராவில் உள்ள விமானப்படைக்கு சொந்தமான வளாகத்தில் குடியிருந்து வந்தனர். ராஜஸ்தானை சேர்ந்த ரேணு தன்வாரை கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீன்தயாள் தீப் திருமணம் செய்து கொண்டார். ரேணு ஆக்ராவில் உள்ள ராணுவ செவிலியர் சேவைப் பிரிவின் கேப்டனாகப் பணிபுரிந்து வந்தார்.
கணவர் தற்கொலை:டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ரேணுவின் தாய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக ரேணுவின் சகோதரர் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரேணு டெல்லி சென்றார். அவர் டெல்லி சென்றிருந்த நிலையில் 14ஆம் தேதி இரவு ஆக்ரா விமானப்படை நிலைய வளாகத்தில் தமது வீட்டில் லெப்டினன்ட் தீன்தயாள் தீப் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள உதவி காவல் ஆணையர் மான்யாக் திவாரி, "14ஆம் தேதி இரவு இரவு உணவுக்குப் பின்னர் தீன்தயாள் தீப் உறங்கச் சென்றார். மறுநாள் காலை நீண்டநேரம் ஆகியும் அவர் எழவில்லை என்பதால், அங்குள்ள அலுவலர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தீன்தயாள் தீப் வீட்டின் கதவை உடைத்து உள்ளே போனபோது அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் கடிதம் எதுவும் எழுதி வைத்திருக்கவில்லை,"என்றார்.
மனைவியும் தற்கொலை: தமது தாயை பார்க்க டெல்லி சென்றிருந்த கேப்டன் ரேணு டெல்லி கண்டோண்மென்ட் பகுதியில் உள்ள ராணுவத்துக்கு சொந்தமான கருடா சரத் ஆபீசர்ஸ் காலனியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். 15ஆம் தேதி காலை அவர் தங்கியிருந்த அறையில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வராததால், அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ரேணு தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், தாயை பார்க்க ரேணு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தபோது கணவர் தற்கொலை செய்து கொண்ட விஷயத்தை கேள்விப்பட்டு மிகவும் வருத்தத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. ரேணு எழுதி வைத்திருந்த கடிதத்தில் தமது கணவரின் உடலுடன் சேர்த்து வைத்து அவரது கையுடன் தமது கையையும் கட்டி அதன் பிறகு தகனம் செய்யும்படி குறிப்பிட்டுள்ளார். இருவரின் தற்கொலை சம்பவம் டெல்லியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை தீர்வல்ல
உங்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட்டாலோ அல்லது உங்கள் நண்பர் குறித்து கவலையில் இருந்தாலோ அல்லது உங்களுக்கு உணர்வு ரீதியான ஆதரவு தேவையென்றாலோ சினேகா பவுண்டேஷனை அழைத்துப் பேசவும். அழைக்க வேண்டிய தொலைபேசி எண்; 044 24640050(24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்) அல்லது சமூக சேவைக்கான டாடா மையமான ஐகால் ( iCall) என்ற உதவி மையத்தின் எண்ணை 9152987821 (திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை) அழைக்கவும்.