புதுச்சேரி: இந்தியா முழுவதும் 18வது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி 7 கட்டங்களாக கடந்த ஜூன் 1ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் முதல்கட்ட தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் உட்பட 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மொத்தமுள்ள 10 லட்சத்து 23 ஆயிரத்து 699 வாக்காளர்களில் 8 லட்சத்து 7 ஆயிரத்து 724 பேர் வாக்களித்தனர். மொத்தம் 78.90 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், நேற்று இந்தியா முழுவதும் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. நேற்று காலை முதலே தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இரவு 8 மணி வரை வாக்கு எண்ணிக்கை நீடித்த நிலையில், முதல் கட்டத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார்.
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் யானாம், இந்திரா நகர் தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மற்ற அனைத்து வேட்பாளரையும் விட கூடுதலான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். வைத்திலிங்கம் (காங்கிரஸ்) 4,26,005 வாக்குகள், நமச்சிவாயம் (பாஜக) 2,89,489 வாக்குகள், மேனகா (நாம் தமிழர்) 39,603 வாக்குகள், தமிழ்செல்வம் (அதிமுக) 25,165 வாக்குகள் பெற்றனர். நோட்டாவிற்கு 9,679 பேர் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட நமச்சிவாயத்தை தவிர அதிமுக, நாம் தமிழர் கட்சி உட்பட 24 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
புதுச்சேரி முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரின் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றது. வெற்றி பெற்ற வைத்திலிங்கத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வெற்றிச் சான்றிதழை வழங்கினார்.