டெல்லி : மக்களவை தேர்தலுக்கான 43 பெயர்கள் அடங்கிய இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது. அதன்படி மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கமல் நாத்தின் மகன் நகுல் நாத் சந்த்வாரா தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் முன்னாள் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் ஜலோர் தொகுதியில் போட்டியிட உள்ளார். முன்னாள் அசாம் முதலமைச்சர் தருண் கோகாய் மகன் கவுரவ் கோகாய் ஜோர்கத் மக்களவையில் தொகுதியில் களம் காணுகிறார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் கே.சி வேணுகோபால், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இரண்டாவது கட்ட வேட்பாளர்களை இறுதி செய்து உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அசாம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், டாமன் மற்றும் டையு ஆகிய மாநிலங்களில் போட்டியிட இள்ள 43 வேட்பாளர்களை தேர்தல் குழு இறுதி செய்து உள்ளதாக கூறினார். மொத்தம் உள்ள 43 பேர் பட்டியலில் 10 பேர் பொது பிரிவினர், 33 வேட்பாளர்கள் பட்டியல் இனம், பழங்குடி இனம், மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.