நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கு 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு துவங்கியது.
சிம்ஸ் என்ற ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பூங்கா இயற்கை எழில்மிக்க பூங்காவாக திகழ்கிறது.
இப்பூங்காவில் மருத்துவ குணம் கொண்ட செடி, கொடிகள், மலர்கள், வானுயர்ந்த மரங்கள் .பசுமை நிறைந்த புல் தரைகள், கண்ணைக் கவரும் அழகிய பறவைகளை காண முடியும். பூங்காவுக்கு ஆண்டு முழுக்க உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
ஆண்டுதோறும் சிம்ஸ் பூங்காவில் மே மாதத்தில் பழக்கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறுவது வளக்கம். கோடை பருவத்தில் நடைபெறும் இந்த பழக்கண்காட்சியில் பலவித மலர்களை சுற்றுலா பயணிகள் பூங்காவில் பார்த்து ரசிக்க முடியும்.
நடப்பாண்டுக்கான கோடை சீசனை முன்னிட்டு, பூங்காவில் மாவட்ட தோட்டக்கலை இயக்குநர் சிபிலாமேரி மலர் நாற்றுகள் நடவு பணியை துவக்கி வைத்தார். 5 லட்சம் மலர் நாற்றுகள் பூங்காவில் பல்வேறு இடங்களில் நடவு செய்யப்பட்டுள்ளது.
இதில் சால்வியா, ஆன்ட்ரினம். பால்சம். பெகோனியா. மேரி கோல்டு. பிரன்ச் மேரி கோல்டு. பேன்சி பிளாக்ஸ். டெல்பினியம். பெட்டுனியா. ஸ்டாக்ஸ். கேலன்டுலா. லேடிலேஸ். காஸ்மஸ். வின்கா. காம்பரினா.ஸ்டேட்டிஸ். லிஸியான்தஸ். ஜினியா. ஸ்வீட் வில்லியம்.செலோசியா. ப்ரிமுளா.கிளியோம். ஆஸ்டர். லூபின் மற்றும் டேலியா போன்ற மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா. ஜப்பான். பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளை தாயகமாகக் கொண்ட 35க்கும் மேற்பட்ட மலர் செடி வகைகள் மற்றும் 130 வகையான நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த நாற்று நடவு நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை இயக்குநர் சிபிலாமேரி, தோட்டக்கலை சிம்ஸ் பூங்கா மேலாளர் லட்சுமணன் மற்றும் சிம்ஸ் பூங்கா தோட்டக்கலை ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.