அமராவதி: ஆந்திர பிரதேச மாநிலத்தில் 175 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் வரும் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இன்று (மே.11) மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் விபத்துக்குள்ளான மினி லோடு ஆட்டோவில் இருந்து கட்டுக்கட்டாக 7 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அனந்தபள்ளி பகுதியில் விஜயவாடாவில் இருந்து விசாகபட்டினம் நோக்கி மினி லோடு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், லோடு ஆட்டோவுக்கு பின்னால் வந்து வந்த மினி லாரி திடீரென எதிர்பாராத விதமாக லோடு ஆட்டோ மீது மோதியது. இதில் சாலையிலேயே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயம் அடைந்த லோடு ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே லோடு ஆட்டோவை சோதனையிட்ட அப்பகுதி மக்கள் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இது குறித்து பொது மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆட்டோவை ஆய்வு செய்து அதில் இருந்த 7 பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.