டெல்லி : மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 -25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து மக்களவையில் பேசிய அவர், நமது இளம் இந்தியா அதன் நோக்கங்களை எதிர்நோக்கி வேகமாக பயணித்து வருவதாகவும், நிகழ் காலத்தில் எண்ணி கர்வம் கொள்ளும் வகையிலும், சிறந்த எதிர்காலத்தை எதிர்நோக்கும் வகையிலும் நம்பிக்கை கொண்டு இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரத்தை சீரான வேகத்தில் கொண்டு செல்லும் பணியில் மத்திய அரசின் சிறந்த கொள்கைகள் மற்றும் அற்புதமான பணிகளின் காரணமாக மூன்றாவது முறையாக நாடாளுமன்றத்தில் பாஜகவின் குரல் ஒலிக்கும் என எதிர்பார்ப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் பல பரிமாணங்களை சேர்ந்த 25 கோடி மக்களை வறுமை கோட்டில் இருந்து வெளியேற தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளதாக நிதி அமைச்சர் கூறினார். இரண்டாம் முறையாக ஆட்சிப் பொறுபேற்றதும் Sabka Saath, Sabka Vikas மற்றும் Sabka Vishwas திட்டங்களை எதிர்நோக்கி அதை வலுப்படும் முயற்சியில் ஈடுபட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.