டெல்லி :மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத் துறை தெரிவித்ததை அடுத்து உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.
முன்னதாக, ஜாமீன் வழக்கு விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா மற்றும் பிபி வரலே ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு, இந்த வழக்கில் சஞ்சய் சிங்கிடம் இருந்து ஊழல் பணம் எதுவும் மீட்கப்படவில்லை, ஆனாலும், அவரை ஆறு மாதங்களாக சிறையில் வைத்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.
மேலும், அவருக்கு தற்போது காவல் தேவையா இல்லையா என்பதையும், அவர் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டை விசாரணையில் தெரிந்து கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அமலாக்கத்துறையிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அமலாக்கத் துறை தரப்பில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.