அசாம்: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா, நாளை (ஜன.22) நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி, பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்பதால், அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வையொட்டி, பல மாநிலங்களில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல, மத்திய அரசு நிறுவனங்களில் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாளை அசைவ உணவுகளுக்கு தடை விதித்து அசாம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அசாம் மாநில மக்கள் அனைவரும் இந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியிருந்தார். இந்நிலையில், நாளை அசாம் மக்கள் அசைவ உணவுகளை பயன்படுத்த கூடாது எனவும், நாளை மக்கள் விரதம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.