டெல்லி:புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜூன் 1 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி இன்று(மே.10) தீர்ப்பளித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் திகார் சிறையிலிருந்து தனது வாகனம் மூலம் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் புறப்பட்டார். அவருக்கு வழி நெடுகிலும், ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேசினார்.
அப்போது அவர், "எனக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்ததற்குக் காரணம் ஹனுமன் தான். நாளை காலை ஹனுமன் கோயிலுக்குச் செல்ல இருக்கிறேன். அதன்பின் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவேன்.
எனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், ஆதரவு அளித்த கோடிக்கணக்கான மக்களுக்கும் நன்றி. சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு 140 கோடி இந்தியர்களின் ஆதரவு தேவை. மேலும், நாம் ஒன்றிணைந்து சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும்" என்றார் கெஜ்ரிவால்.
இதையும் படிங்க:டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் - உச்சநீதிமன்றம் உத்தரவு! - Bail To Arvind Kejriwal