கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், டிசம்பர் 30-ஆம் தேதி திங்கட்கிழமை நடந்த குறைதீர்க்கும் முகாமன்று தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவர் ச.கருப்பையா மற்றும் சமநீதி கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவர் ச.கருப்பையா, "கரூர் மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 20 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக ப்ளீச்சிங் பவுடர், பர்னிச்சர்கள் வாங்கியதாகவும், அனுமதியே இல்லாமல் பல்வேறு பகுதிகளில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டதாகவும் கூறி இந்த ஊழல் அரங்கேறியுள்ளது.
இது குறித்து 3 ஊராட்சி ஒன்றிய ஆணையர்களை மாவட்ட நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கையை தலித் விடுதலை இயக்கம், சமநீதி கழகத்தின் மாநில இயக்கம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் வரவேற்கிறது, பாராட்டுகிறது. ஆனால் அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகம் இது குறித்து தனிநபர் கமிஷன் அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: இது நாடா, சுடுகாடா? ஏழு நாட்களாகியும் நடவடிக்கை இல்லை - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
ஊழல் செய்யப்பட்ட மக்கள் வரி பணத்தை மோசடி செய்த அரசு அலுவலகர்களிடம் இருந்து முதலில் திரும்ப பெற வேண்டும். அவர்களை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும். இது தான் எங்களது கோரிக்கை இது குறித்து ஆட்சியருக்கு மனு அளித்துள்ளோம், மேலும் முதலமைச்சருக்கும் மனு அனுப்பியுள்ளோம். எனவே, இந்த விஷயத்தில் திமுக அரசு மெத்தனம் காட்டாமல், ஊழலை மூடிமறைக்காமல் தனிநபர் கமிஷன் அமைத்து ஊழலை வெளி கொண்டு வர வேண்டும்” என்றார்.