புதுடெல்லி: நிதி, வேளாண்மை, டிஜிட்டல் பணப்பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் இன்று முதல் சில புதிய மாற்றங்களை மத்திய அரசு அமல்படுத்துகிறது. மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.
வருங்கால வைப்பு நிதியின் கீழ் பென்ஷன் பணம்: வருங்கால வைப்பு நிதி நிறுவனம் பென்ஷனை ஆன்லைன் வழியே பெறுவதை எளிமையான முறையில் பெறும் வகையில் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வருங்கால வைப்பு நிதியில் பென்ஷன் பெறுவோர் எந்த ஒரு வங்கிக்கணக்கு வழியாகவும் கூடுதல் சரிபார்த்தல் இல்லாமல் பெற முடியும். மேலும் வருங்கால வைப்பு நிதி நிறுவனமானது எந்த நேரத்திலும் உபயோகிப்பதற்கான ஏடிஎம் அட்டைகளை வழங்க உள்ளது. பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பு வரம்பை நீக்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
யுபிஐ பணப்பரிமாற்றம்: மொபைல் செயலிகள் வழியே பணப்பரிமாற்றம் செய்வோர் யுபிஐ123, யுபிஐ லைட் ஆகிய வசதிகளை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்வதற்கான வரம்பை ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. யுபிஐ 123 உபயோகித்து பணம் பரிமாற்றம் செய்வதற்கான வரம்பு ரூ.5000த்தில் இருந்து ரூ.10000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல யுபிஐ லைட் முறையில் பணப் பரிமாற்றம் செய்வதற்கான வரம்பு ரூ.500ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிறந்தது புத்தாண்டு 2025: முதலமைச்சர் முதல் தவெக தலைவர் வரை அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
விவசாயிகளுக்கு கடன் வரம்பு அதிகரிப்பு: விவசாயிகள் வங்கிகளில் இதுவரை அடமானம் இல்லாத கடனாக ரூ.1.6 லட்சம் மட்டுமே பெற முடியும் நிலை இருந்தது. இது இப்போது ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேளாண் முதலீடுகளுக்கு அதிக நிதி ஆதரவு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பான ஜிஎஸ்டி நடைமுறை: வரி செலுத்துவோர் ஜிஎஸ்டி இணையதளத்தை பயன்படுத்துவோர் பன்முக அங்கீகார முறையை கட்டாயம் முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். இவே ரசீதுகளை உருவாக்க அடிப்படை ஆவணங்கள் 180 நாட்களுக்கு மேலானதாக இருக்கக்கூடாது என்பதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விசா மறு விண்ணப்பத்தில் எளிய முறை: கொள்கை அடிப்படையில், அமெரிக்காவுக்கான குடிபெயர்வு இல்லாத விசா விண்ணப்பங்களுக்கான நேர்காணலை கட்டணம் இலலாமல் மறு நேர்காணலுக்கான தேதியை தேர்ந்தெடுக்கலாம். எனினும் ஒருமுறைக்கு மேல் மீண்டும் மறுநேர்காணல் கோரினால் அது புதிய விண்ணப்பமாக கருதி கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இன்னொருபுறம் இன்று முதல் தாய்லாந்து சர்வதேச இ-விசா நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது. தாய்லாந்தில் இறங்கும் முன்பே பாதுகாப்பான பயண அங்கீகாரத்தை தாய்லாந்து வழங்குகிறது. இதற்கிடையே, வரும் ஜனவரி 17ஆம் தேதி முதல் எச்பி1 விசா நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எஃப்-1 விசா வைத்திருக்கும் இந்தியர்கள் மேலும் எளிமையாக நடைமுறைகளைப் பின்பற்ற உதவும்.