சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமது இல்லத்தில் சசிகலா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2026 இல் அம்மாவின் ஆட்சி அமைப்பது தான் எங்களின் இலக்கு. தமிழக மக்களுக்காக நிச்சயம் செய்ய வேண்டிய பொறுப்பு எங்களிடம் தலைவர்கள் விட்டுச் சென்றிருக்கின்றனர். அதை நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்பதே என்னுடைய முழு நேர நிலைப்பாடு. 2026 இல் அதிமுக ஒன்றிணைய நிச்சயம் வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு குற்ற நடவடிக்கைகளையும் அரசாங்கம் பார்த்து வருகிறது. முதலமைச்சர் தான் அதற்குப் பொறுப்பு. அவரின் கீழ்தான் காவல் துறை இயங்கி வருகின்றது. அவர்கள் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், ஆனால் எடுப்பது போல் தெரியவில்லை.
இந்தவொரு விஷயம் மட்டும் இல்லை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ரொம்ப மோசமாக இருக்கிறது. அது அனைவருக்குமே வெளிச்சமாக தெரிகிறது. நிறைய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் எதையும் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை.
துணைவேந்தர் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகம் இயங்கிக் கொண்டிருக்கிறது இதுவே அங்கு நடந்த குற்றத்திற்கு முக்கிய காரணம் . இதுபோல் 5 பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இல்லாமல் இயங்கி வருகின்றன. உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கதான் செய்வார்கள்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் முதலமைச்சர் ஏன் ஆமை வேகத்தில் செயல்படுகிறார் என்று தெரியவில்லை. இதுவே ஜெயலலிதாவாக இருந்திருந்தால் கதையே வேறு. இதில் ஏதோ ஒரு வகையில் திமுகவிற்கு சம்பந்தம் இருக்கிறது. உடனடியாக இதற்கான தீர்வை காண வேண்டும். உங்கள் திராவிட ஆட்சியில் எங்கள் பெண்கள் வெளியே போக முடியவில்லை. கல்லூரி மாணவிக்கே இந்த நிலைமை ஏற்படுகிறது. இதைத்தான் நீங்கள் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக விவகாரம் தொடர்பாக ஒவ்வொருவரும் ஒரு கருத்தை தெரிவிப்பார்கள். ஆனால் எனக்கு 40ஆண்டு கால அனுபவம் உள்ளதால், நான் பொறுமையாக தான் தெரிவிப்பேன். பொறுத்திருந்து பாருங்கள். தனிப்பட்ட முடிவு என்பது மற்ற கட்சிகளில் எடுக்கலாம். ஆனால் எங்கள் கட்சியில் எடுக்க முடியாது. யார் என்ன சொன்னாலும், இறுதி எஜமானர்கள் மக்கள். அவர்கள் தீர்ப்பு கூறுவார்கள். அம்மாவின் வழியில் மக்களை நான் சந்தித்து வருகிறேன் என்று சசிகலா கூறினார்.