திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோயில் முருகனின் ஐந்தாம் படை வீடாகும். இந்த கோயிலில் இன்று (ஜனவரி 1) 2025ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நேற்று நள்ளிரவில் சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சிக்கு சாமானிய பக்தர்களுக்கு நள்ளிரவில் இரண்டு மணி நேரம் அனுமதி மறுக்கப்பட்டது. எனினும் அந்த நேரத்தில் முக்கிய பிரமுகர்கள் (விஐபிக்கள்) மட்டும் உள்ளே அமர வைக்கப்பட்டு, அவர்கள் சிறப்பு பூஜையில் முருகனை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணிக்கு பிரபல திரைப்பட நடிகர் யோகி பாபு சாமி தரிசனத்திற்கு வருகை புரிந்தார். அங்கு உற்சவர் சண்முக பெருமாள், மூலவர் முருகப்பெருமான் ஆகிய சன்னதிகளில் வணங்கிய யோகி பாபுக்கு கோயில் சார்பில் மலர் மாலை, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: வண்ணமயமாய் மனதை வருட வரும் சென்னை மலர் கண்காட்சி! எப்போது தெரியுமா?
கோவிலுக்கு வந்த யோகி பாபுவை கண்டு உற்சாகமடைந்த அவரது ரசிகர்கள், அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, அவருடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
இவ்வாறு விஐபி தரிசனத்திற்கு வருகை தருபவர்0களின் எண்ணிக்கையும், புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களும் அதிகளவில் திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகை தந்ததால். பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து வழிபாடு செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.