ஹைதராபாத்:கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு கப் டீ 340 ரூபாய்க்கு விற்கப்படுவது குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் தமது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் ு('The Coffee Bean and Tea Leaf') சூடுநீரும், தேயிலை தூள் பையும் அடங்கிய ஒரு கப் டீ 340 ரூபாய்க்கு விற்கப்படுவதை இன்று தான் அறிந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், " சில ஆண்டுகளுக்கு முன், இதேபோன்று சூடுநீரும், தேயிலை பையும் அடங்கிய ஒரு கப் டீ, சென்னை விமான நிலையத்தில் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறித்து ட்வீட் செய்திருந்தேன். அந்த பதிவிற்கு பிறகு, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்தது" என்றும் ப.சிதம்பரம் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.