சென்னை: ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். எனவே புதிய தொழில் முதலீடுகள் தமிழ்நாடு முழுவதும் கிடைக்கும்படி நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, "தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலம் என்று சொல்கிறார்கள். அது தவறு, மகாராஷ்டிராவில் மும்பை நகரம் இல்லா விட்டால் அங்கு தொழில் வளர்ச்சி என்பது இல்லை. தமிழ்நாட்டில் அப்படி இல்லை. அனைத்து பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த 43 சதவீத பெண்கள் இந்தியா முழுவதும் உயர் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். 35 சதவீத எலெட்ரானிக்ஸ் பொருட்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது,"என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பி.ராஜா, "தமிழகத்தின் பெருமைகள் தமிழகத்தின் தொன்மைகள் குறித்து நாம் பேச வேண்டும். உலகளாவிய பல நிறுவனங்களில் இன்று தமிழ்நாட்டின் திறன் மிக்க மாணவர்கள் கோலோச்சிகிறார்கள் என்பதையும் அறிவோம்.
இன்னமும் மற்றவர்களின் காப்புரிமைக்கு உற்பத்தி செய்து கொடுபவர்களாக இல்லாமல், நாம் நமது சொந்த காப்புரிமைக்கான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். அடுத்த கட்டத்திற்கு தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உயர்த்த வேண்டும்.ஆராய்ச்சி மாணவர்களுக்கு அரசின் சார்பில் தனி நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளனர். ரிஸ்க் எடுத்து கற்பனை திறனை முழுமையாக செயல்படுத்தி ஆராய்ச்சிகளில் வெற்றி பெற வேண்டும்.
ஸ்ரீபெரும்புதூரில் ஏற்கனவே நிறைய தொழில் நிறுவனங்கள் உள்ளன. ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். எனவே புதிய தொழில் முதலீடுகள் தமிழ்நாடு முழுவதும் கிடைக்கும்படி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். தொழில் முதலீடுகளை தமிழகம் முழுவதும் பரலாக்கம் செய்யும் வகையில் பல நிறுவனங்களை தென் தமிழகத்திலும் முதலீடு செய்ய வைத்துள்ளோம். பரவலாக்கப்பட்ட தொழில் முதலீடு காரணமாக தென் தமிழகமும் வளர்ச்சி அடைந்து வருகிறது,"என்றார்.